Thursday, July 26, 2007

மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்

நான் சாதாரணப் பெண் இல்லை.மற்ற பெண்களினின்றும் சற்று வித்தியாசமானவள்.அனாவசியமான பேச்சுக்கள்
பேசமாட்டேன்.மற்றவர்களுடன் வம்பு தும்புகளுக்குப் போகமாட்டேன்.
அரட்டை சுத்தமாகப் பிடிக்காது.நாளிதழ்,வார இதழ்களைப் படிப்பேன்.சரித்திர நாவல்களில் சாண்டில்யனின்
கடல்புறா,யவன ராணி படித்திருக்கிறேன்.எந்த ஒரு பிரச்சனை என்றாலும்
சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு முறைக்கு இரு முறை சந்தேகம் தீரக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.பொது அறிவு கொஞ்சம் அதிகம் தான்.இவ்வளவு தூரம் தன்னம்பிக்கை கொண்ட நானே டாக்டர் கூறியதைக் கேட்டதும் திகைத்து நின்று விட்டேன்.
மயக்கம் வந்து விட்டது.என் கணவர் அருகிலுள்ள கடைக்குச் சென்று மினரல் வாட்டர் பாட்டில் ஒன்று வாங்கி வந்தார்.குடிக்கக் கொடுத்தார்.சிறிதுநேரத்திற்குள் சமாளித்து வீட்டுக்கு வந்தோம்.ஒன்றும் புரியவில்லை.டாக்டர் கூறியது உண்மையாகிவிடக் கூடாது என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டேன்.

மறு நாள் காலை ஆட்டோவில் பச்சையப்பா கல்லூரிக்கு அருகில் உள்ள பிரிசிசன் டயாக்னசிக் சென்டர் என்ற பரிசோதனை நிலையத்திற்குச் சென்றோம்.மேமோகிராம் என்ற டெஸ்ட் எடுத்துக்கொண்டேன்.
மேமோகிராம் என்பது இரண்டு மார்பகங்களையும் எக்ஸ்ரே எடுப்பதாகும்.
டாக்டரிடம் கொண்டு வந்து காண்பித்தேன்.எனது வலது மார்பகத்தில் புற்றுநோய்வந்திருக்கிறது என்றும் மேற்கொண்டு சிகிச்சைக்காக அதற்குரிய டாக்டரை அணுகுமாறும் அறிவுறுத்தினார்.அவர் என்ன செய்வார் பாவம்.பிரச்சனை எனக்குத்தானே!
எங்கு போவது யாரை பார்ப்பது ஒன்றுமே புரியவில்லை.அண்ணாநகரில் உள்ள எஸ்.எம்.எஃப். என்று அழைக்கப்படுகிற சுந்தரம் மெடிகல் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் லட்சுமி நாராயணன் என்ற டாக்டர் புற்றுநோய்க்கான மருத்துவர் இருக்கிறார் என்று விசாரித்ததில் தெரிந்தது.இரு நாட்களில் அவரிடம் அப்பாய்ன்மெண்ட் பெற்றுச் சந்தித்தேன்.நேரில் போனபின் தான் தெரிந்தது அந்த மருத்துவர் ஓர் ஆண் என்று.

அதற்குமுன் எந்த ஓர் ஆண் டாக்டரிடம் என் அந்தரங்க உறுப்புகளைக் காட்டியதில்லை.இவ்வளவு ஆண்டு வாழ்க்கையில் வெறும் தலைவலி
காய்ச்சல் என்றுதான் டாக்டரிடம் சென்றிருக்கின்றேன்.
என்ன சார் பெயர் லஷ்மிநாராயணன் என்று பார்த்தவுடன் பெண்டாக்டர் என்று
தவறுதலாக நினத்து விட்டேனே என்றேன்.ஒருநிமிடம் திகைத்துநின்றுவிட்டார் அந்த டாக்டர்.சென்னையில் எந்தப் பெண்ணும் ஒரு ஆண் டாக்டரிடம் இப்படிக் கேட்டிருக்க மாட்டார் போலிருக்கிறது.
டாக்டரும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு "ஆமாம்.உங்களுக்கு கேன்சர் வந்திருக்கிறது.அதன் வீரியம் எவ்வளவு தூரம் உள்ளது என்று பார்க்க வேண்டும்."எஃப்.என்.ஏ.சி.என்ற டெஸ்ட் எடுக்க வேண்டும்.
நான் இங்கு வாரம் இரண்டு நாட்கள் தான் வருகிறேன்.அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வருகிறேன்.மற்றபடி பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் உள்ள கே.எஸ்.மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்கிறேன்.எனவே எஃப்.என்.ஏ.சி.டெஸ்ட்எடுத்துக் கொண்டு பிறகு அங்கு வந்து பாருங்கள் என்று கூறினார்.மீண்டும் பிரிசிஸன் டயாக்னஸ்டிக் சென்டருக்கு வந்தோம்.

எஃப்.என்.ஏ.சி.டெஸ்ட் என்பது ஒரு நீண்ட மிக நுண்ணிய துவாரம் உள்ள ஊசியை மார்பகத்தினுள் செலுத்தி நோய் வந்திருக்கும் பகுதியிலிருந்து சிறிதளவு எடுத்துப் பரிசோதிப்பதாகும்.அந்த சோதனையின் போது உயிரே போகும்படி இருந்தது.மறுநாள் அந்த ரிசல்டைக் கொண்டு டாக்டரிடம் காண்பித்தோம்.உங்களுக்கு கேன்சர் வந்திருப்பது மூன்றாவது ஸ்டேஜ்.
நோய் வந்திருக்கும் மார்பகத்தை ஆபரேஷன் செய்து எடுத்துவிட வேண்டும்.
அடுத்து....என்று வரிசையாகக் கூற ஆரம்பித்தார்.

என்ன ஆண்டவனிடம் முறையிட்டு என்ன பிரயோசனம்?
இதெல்லாம் என்ன சாதாரணமான பிரச்சனையா?ஓகே என்று ஒப்புக்கொண்டு விடுவதற்கு?டாக்டர் கூறியதெல்லாம் ஒன்றும் காதில் ஏறவே இல்லை.
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.ஒரு பெண்ணுக்குரிய உடல் உறுப்பை அதுவும் மார்பகத்தை இழப்பதற்கு எந்தப் பெண் சம்மதிப்பாள்?அப்புறம் வெளிஉலகில் எப்படி நடமாடுவாள்?ஐயோஇதென்ன சோதனை?
என்ன செய்வது?
ஏன் சார்.இதற்கு வேறெ சிகிச்சையே இல்லையா?என்றேன்
ஏம்மா.இவ்வளவு நேரம் விலாவாரியாக வரிசையாக சொல்லிக் கொண்டு வந்தேனே
தலையாட்டிக் கொண்டே வந்தீர்களே?
எனக்கென்ன சார் கேட்டது.என்ன சொன்னீங்க?
டாக்டர் பரிதாபமாக என்னைப் பார்த்தார்.பாவம் ஒருமுறை தான் விளக்கிச் சொல்லி அனுபவம் போலிருக்கிறது.
"டாக்டர்.கடைசியாக ஒரு கேள்வி"
"கேளுங்கள்"
'வேறெ ஒரு (நல்ல என்று கேட்கவில்லை)டாக்டரிடம் காண்பிக்கலாமா?"
டாக்டருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
வெளியே வந்து விட்டோம்.

என்ன படித்து என்ன பிரயோசனம்.கேன்சர் என்ற நோய் பற்றி ஏதும் படிக்கவில்லையே,ஒன்றுமே தெரியவில்லையே.
எனக்கு எப்படி இந்த நோய் வந்திருக்கும்?
என்ன காரணம்?ஒரு குற்றமும் செய்யவில்லையே?
ஆண்களுக்கு இருப்பதுபோல் தண்ணியடிப்பது,சிகரெட்,புகையிலை என்று
பெண்களுக்கு ஒரு கெட்ட பழக்கமும் பெண்களுக்கு இல்லையே.
எவ்வளவோ பேர்களுக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறேன்.
எனக்கா எந்த நிலைமை?
என் கணவரைப் பார்த்தேன்.அவருக்கும் கேன்சர் தொடர்பாக ஏதும் தேரியவில்லை,படிக்கவில்லை.ஒரே குழப்பமாக இருந்தது.

ஆபரேஷனைத் தவிர்க்க முடியுமா?அதற்கு என்ன செய்யலாம்?
வேறெ டாக்டரைப் பார்ப்போமா?
பார்ப்போம் என்றமுடிவுக்கு வந்தோம்.
சரி.எந்த டாக்டரைப் பார்ப்பது?

Saturday, July 21, 2007

வாழ்வின் அர்த்தம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை

மண வாழ்க்கையின் தத்துவத்தை நான்கே வரிகளில் அடக்கிய பாடல்.
முதலிரண்டு வரிகளும் அநேகமாக வெற்றி கொள்ளப்படுகின்றன.
பெரும்பாலான காதல் ஜோடிகள் (திரு)மணமுடித்து விடுகின்றனர்.
அத்துடன் முடிகிறதா காதலின் வெற்றி?இல்லை.இல்லவே இல்லை.
அதற்குப் பிறகு தான் பிரச்சனையே.
வாழ்ந்து பார்க்க வேண்டும்.பிறர் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும்.
சின்னஞ் சிறு வயது முதல் சேர்ந்து விளையாடியதும்-பின்
கன்னத்தில் முத்தமிட்டுக் கனிவாய்க் கொஞ்சியதும்
வளர் பருவம் கண்டுக் காதல் அரும்பியதும்
உளமிரண்டின் செயல் கண்டு பெற்றோர் காட்டிய எதிர்ப்பைத்
திடங் கொண்டு சந்தித்ததும், மண வாழ்வு காணச்
சிந்தித்ததும்,பின் செயலாக்கியதும்
பொய்யாய்ப் பழங்கதையாய்ப் பின் கற்பனையாய் மெல்லப்
போய் விடும்.உண்மையான காதல் அதற்குப் பிறகு தான் தொடங்குகிறது.

வீட்டுக்குள்ளேயும் பிரச்சனை. வெளியேயும் பிரச்சனை.பெற்றோர் உற்றோர் இடத்தும்
பிரச்சனை.எங்கெங்கு காணினும் பிரச்சனையடா(டீ!)
அவ்வளவையும் சமாளித்து வெற்றி கொள்ள வேண்டும்.
கணவன் மனைவிக் கிடையே ஆயிரமாயிரம் கருத்து வேற்றுமைகள் வரும்.
உங்கள் ஈகோ உங்களையே கர்வம் கொள்ளச் செய்து சண்டையைக்
காட்டுத் தீ போல வளர்த்துவிடும்.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் பழகுங்கள்.பிரச்சனைகளைச் சந்தியுங்கள்.சமாளியுங்கள்.வெற்றி கொள்ளுங்கள்.
அவ்வளவு தான்.மேலே சொன்ன பாடலின் மூன்றாவது வரியையும்
வெற்றி கொண்டு விடலாம்.

காதலின் அர்த்தமும் வெற்றியும் அத்துடன் முடிந்துபோய் விடுகின்றது.
சேர்ந்து போவதோ தனித் தனியாகப் போவதோ இயற்கை பார்த்துக் கொள்ளும்.

என் வாழ்வில் மூன்றாவது வரியை வெற்றி கொண்ட கதையை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மணமுடிப்பதும்,குழந்தைகளைப் பெறுவதும் வளர்ப்பதும் ஒவ்வொருவரின்
வாழ்வின் பகுதிகள்.குழ்ந்தைகளை நன்மக்களாக வளர்த்தேன்.ஒவ்வொன்றும் படிப்பில் படு சுட்டி.கணவரோ சதா சர்வ காலமும் ஆபீஸ்,ஆபீஸ் என்று
அலைபவர்.ஆபீஸ் தான் என்னுடைய முதல் பொஞ்சாதி என்று வேடிக்கையாச் சொல்வார்.அது கிட்டத்தட்ட உண்மை தான்.
குழந்தைகள் அனைவருக்கும் மணமுடித்துப் பேரன் பேத்திகளையும்
கண்டாயிற்று.அப்புறம் வேறென்ன என்று கேட்கிறீர்களா?கதையே அப்புறம் தான்!

2002 ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தின் பிற்பகுதி வாக்கில் ஒரு நாளிரவு
நல்ல தூக்கத்திலிருந்தேன்.திடீரென்று படுக்கையிலிருந்து கீழே விழுந்து விட்டேன்.
வாய்,நாக்கு,உதடு என்று எல்லாமே ஜிவு ஜிவு என்று இழுத்து விட்டது.என்னங்க என்னங்க என்று கணவரைக் கூப்பிட முயன்றேன்.வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்ட மாதிரி உணர்ந்தேன்.அதற்குள் என் கணவரும் எழுந்து விட்டார்.என் நிலையைப் பார்த்து உடனே ஆட்டோவை வரவழைத்து மருத்துவ மனைக்கு விரைந்தோம்.போகும் வழியெல்லாம் முருகா முருகா என்று வாய் விட்டுக் கூறிக் கொண்டே இருந்தேன்.முருகன் மீது உள்ள பக்தியினால் என்று தவறுதலாக நினைத்து விடாதீர்கள்.ஒன்றுமே பேசாமல் சும்மா 'கம்'ன்று இருந்துவிட்டால் ஒருவேளை வாய் கோணிகொண்டு விடுமோ என்ற பயம் தான்.மருத்துவமனை போய் சேர்வதற்குள் ஜிவு ஜிவு போய் விட்டது.
வாய் நன்றாக ஆகி விட்டது.இருந்தாலும் அட்மிட் ஆனேன்.ஏதோ ஊசி போட்டார்கள்.மறுநாள் வந்து பரிசோதித்த டாக்டர் சி.டி.ஸ்கேன்,பிரைய்ன் மேப்,பிளட் டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டும்என்றார்.எடுத்தோம்.காட்டினோம்.
இது ஒன்றுமில்லை. இந்த வயதில் பெண்களுக்கு வரும் வியாதி தான் இதற்கு 'பிரி மெனோபாஸ் சிண்ட்ரோம்' என்பார்கள்.சிறிது காலம் மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார் டாக்டர்.
மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் அதிசயத்தக்க முடிவை எடுத்தார் என் கணவர்.
ஆபீஸ் ஆபீஸ் என்று இருந்தது போதும்.இனி உன்னைக் கவனிப்பது தான்
என் முதல் வேலை என்றார்.தன் விருப்ப ஓய்விற்கு(விஆர்.எஸ்) விண்ணப்பித்து விட்டார்.வருவாய்த் துறையில் முப்பத்து ஒன்பது ஆண்டுகள் சீரும் சிறப்புமாகப் பணி புரிந்து துணைக் கலெக்டர் பதவி உயர்வு வரும்
நேரம்.வருவாய்த் துறை அலுவலர் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு இப் பதவி உயர்வு.என் மனைவியின் உடல் நலம் பராமரிப்பது தான் என் முன் நிற்கும் முதல் பணி.இதற்கு இடைஞ்சலாக வரும் எதுவும் (பதவி உயர்வு உட்பட)எனக்குத் தூசு என்றார்.ஒரு முடிவெடுத்தால் சாதிக்காமல் விடவே மாட்டார். வி.ஆர்.எஸ்.பெற்று விட்டார்.மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள்
பணி புரிந்திருக்கலாம்.56ஆவது வயதிலேயே ஓய்வு பெற்றார்.
சொல்ல மறந்து விட்டேன்.அவர் இதய நோய் காரணமாக பை பாஸ் ஆபரேஷன் பிறகு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டவர்.எனவே
மருத்துவ சிகிச்சை முன்னிட்டு தருமமிகு சென்னைக்குக் குடி பெயர்ந்தோம்.

ஏறத்தாழ ஓராண்டிற்குப் பிறகு
வலது மார்பகத்தில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.ஒரு வாரம் தான் போயிருக்கும்.வலிக்கிற மாதிரி இருந்தது.கொஞ்சம் கட்டி மாதிரி தோன்றியது.எதற்கும் ஒரு கைனகாலஜிஸ்டிடம் காட்டுவோம் என்று முடிவு செய்து போனோம்.பரிசோதித்துப் பார்த்த மகப் பேறு மருத்துவர் சீரியஸாக முகத்தை வைத்துக் கண்டு இது கேன்சர் மாதிரி இருக்கிறது.ஒரு மேமோகிராம் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார்.இரண்டு கால்களையும் வாரியது போல் இருந்தது எனக்கு.

Saturday, July 7, 2007

சிலநேரங்களில் சில நோய்கள்

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா!"என்று பாடினான் பாரதி.இல்லை,இல்லை.மா பாவம் செய்திருக்க வேண்டும் என்கிறேன் நான்.அதிர்ச்சியாக இருக்கிறதா?என்னடா இவள் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவளோ?என எண்ணுகிறீர்களா?மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு பெண்ணும் இதைத்தான கூறுவாள்.
மனித சமுதாயத்தில் எவ்வளவோ துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துவிட்டோம்.நாகரிகத்திலும் மேம்பட்டுவிட்டோம்.அதற்கேற்பப் பலவிதமான செளகரியங்களும் அதன் விளைவாகப் பல்வேறு நோய்களும் பெற்றுவிட்டோம்.நடந்தும் கட்டைவண்டியிலும் சென்று கொண்டிருந்த காலம் போய் விட்டது.விதவிதமான சொகுசுக் கார்கள்,டிரெயின்,ஏரோப்ளேன் என வேகத்தில் காலத்தையே
முந்த முயற்சிக்கிறோம். மருத்துவத்துறையிலும்தான் எத்தனை மாற்றங்கள்?ஐம்பது ஆண்டுகளுக்குமுன் ஒரு ஏரியாவுக்கு ஒன்றிரண்டு கம்பவுண்டர்கள் இருப்பார்கள்.அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த நேரம் போக மீதி நேரத்தில்
வீட்டிலேயே மருத்துவம் பார்ப்பார்கள்.தலைவலி காய்ச்சல் வயிற்றுப்போக்கு என எந்த நோய் வந்தாலும் நோயாளிகள் கையோடு ஒன்றிரண்டு பாட்டில்களையும் கொண்டுபோக வேண்டும்.அந்தப் பாட்டில்களில் கலர்கலராய் மருந்து ஊற்றுவார்.மிகச்சில நபர்களுக்கு ஒரு சில மாத்திரைகளைப் பொடி செய்து பவுடராக்கி பொட்டணங்களாக மடித்துத் தருவார்.
அவ்வளவு தான் மருந்து. ஃபீஸ் எவ்வளவு என்று கேட்கிறீர்களா? வெறும் நாலணா.அதாவது இருபத்திஐந்து பைசா மட்டுமே.அவர் கொடுக்கும் மருந்துக்கான விலையும் அதில் அடக்கம். அதெல்லாம் அந்தக்காலம்.இப்போது தலைவலி என்றால் போதும்.ஒற்றைத் தலைவலியா இரட்டைத் த்லைவலியா என்று டாக்டர் கேட்பார்.ஒற்றைத் தலைவலி என்றால் அடுத்த தெருவில் உள்ள ஸ்பெஷ்லிஸ்ட்டைப் பாருங்கள் என்று ஆலோசனை சொல்லிவிட்டு அதற்கு ஃபீஸ் ஐநூறு ரூபாயைப் பிடுங்கிக்கொள்வார்.அதாவது ஒவ்வொரு வகையான வியாதிக்கும் ஒவ்வொரு துறையாகப் பிரித்து அதில் ஸ்பெஷலைஸ் செய்து படித்த டாக்டர்கள் வந்து விட்டார்கள்.ஏன் நீங்களே பார்க்கலாமே என்று நாம் கேட்க முடியாது.எதற்கெடுத்தாலும் இ.ஸி.ஜி.,ஸ்கேன்(அதிலும் அல்ட்ராசவுண்டு.,சி.டி.,எம்.ஆர்.ஐ..,64ஸ்லைடு ஸ்கேன்.,பெட் ஸ்கேன் என்று பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்) அத்தோடு பிளட் டெஸ்ட் எல்லாம் முடித்துக்கொண்டு மீண்டும் டாக்டரைப் பார்க்க வேண்டும்.ஒவ்வொன்றாக அனைத்தையும் பரிசீலித்தபின் ஒன்றும் பிரச்சனையில்லை.கவலைப்படாதீர்கள்.தலைவலி வரும்போதல்லாம் இதில் ஒரு மாத்திரையைச் சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு ஒரு சீட்டில் மருந்து எழுதித் தருவார்."மெடாசின்"என்று எழுதியிருக்கும் அதில். அவரைச் சொல்லிக் குற்றைமில்லை.எழுதிக்கொடுக்கும் மருந்தினால் ஏதாகிலும் ஏடாகூடமாகி விடக் கூடாது என்பதற்காகவும்,தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும்,ஸ்கேன் முதலிய டெஸ்டுகளினால்
கமிஷன் கிடைப்பதினாலும் அவர் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
நமக்கும் வேறு வழி இல்லை.இன்றைய அவசர உலகில் அனைத்திலும் சீர்கேடு என்பதில் நமது உடல் நலமும் அடங்கி விட்டது.எவ்வளவுதான் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தாலும் நோய் வந்துவிடுகிறது.வேறு வழியில்லாமல் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெறுகிறோம்.இதில் யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
சரி.இதற்கு டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
"வருமுன் காப்போம் என்பது சில நோய்களுக்கு மட்டுமே பொருந்துகிறது.
புகை பிடிக்காமல் இருந்தாலே இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். கொழுப்பு சேர்க்கலாமா?" "கூடாது கூடாது.இதயநோய் வருவதற்கு கொழுப்பும் முக்கிய காரணம்." "சரி ஸ்வீட் ,மட்டன் சிக்கன் சேர்க்கலாமா?" " என்ன சார்.இப்ப தானே சொன்னேன்.கொழுப்பு சேர்க்காதீர்களென்று?" "ஓஹோ!சரிவேறென்ன செய்ய வேண்டும்?" "தினமும் அரை மணி நேரமாவது ந்டைப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்." "ஓகே.
இதெல்லாம் மேற்கொண்டால் ஹார்ட் அட்டாக் வராதா?" "ஹூஹும்.வராமல் இருக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.அவ்வளவுதான்."
இப்படியே ஒவ்வொரு நோய்க்கும் ஒரு காரணம் சொல்லமுடியும்.
"சரி,ஒரு கெட்ட பழக்கமுமில்லை.தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்.சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறேன்.உணவு முறையில் நீங்கள் சொன்னதை அப்படியே கடைபிடிக்கிறேன்.நோயே வராதா" என்று கேட்டால் ?
"பெரும்பாலான நோய்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.ஆனால்?"
"என்ன ஆனால்? "
"பரம்பரை நோய்களான சர்க்கரை நோய்,புற்றுநோய் வரலாம்.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?"
"என்ன சார் எங்க அப்பா அம்மா தாத்தா பாட்டி யாருக்குமே இந்தநோய் இல்லையே?" "அப்படியானால் உங்க கொள்ளுத்தாத்தா,கொள்ளுப்பாட்டி இல்லேன்னா அவங்களோட பெற்றோர் யாருக்காயினும் இருந்திருக்கும்."
"சார் சார்.அப்படி எல்லாம் இல்லையே சார்." "ஓஹோ.அப்படீன்னா இனிமேல் உங்க குழந்தைகளுக்கு வரலாம். பரம்பரை நோயோன்னோ?"
இதற்குமேல் உங்களுக்குப் பேச வராது.

Wednesday, July 4, 2007

கேன்சருடன் ஒரு யுத்தம்

யாரிவள்?
வலைக்குப் புதியவள்
வலைப் பதிவர்க்கும் புதியவள்
கேட்டவர்க் கெல்லாம்
இல்லையென்னாது
வகை வகையாய் உதவியவள்
யாருக்கும் பாரமாய் இல்லாது
மாலையிட்ட கணவருக்கும்
மகிழ்ந்து பெற்ற மகவுகளுக்கும்
சுமைதாங்கியாய் இருந்தவள்
அவர்களின் கனவுகளை நனவாக்கத்
தன் கனவுகளைத் தொலைத்தவள்
அல்லும் பகலும் அயராது உழைத்தவள்
அவர்கள் சாய்ந்துகொள்ளத்
தோள் கொடுத்தவள்
இவளின் தன்னலங் கருதா
உழைப்பையும் உறுதியும் கண்டு
ஊழே பொறாமை கொண்டது
இவளின் தவத்திற்கு
ஊறு விளைவிக்க
உறுதி பூண்டது.
உற்றம் மயங்க
சுற்றம் கலங்கப்
பெற்றுவரும் பெயர் திரியப்
புற்றுநோய்க்கு ஆளாக்கிப்
பெருமிதம் கொண்டது.
அடுக்குமா இவ்வூழின்
அவலச் செயலுக்கு?
சான்றோரே சான்றோரே
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்றீரே என்றீரே
தீதென்ன செய்தேன்
தீங்கென்ன விளைவித்தேன்
ஏன் உற்றது இப் புற்று?
என்றிவளின் வினாவிற்கோ
பதிலில்லை பதிலில்லை.
அடுத்துச் சிந்திப்பதற்கு
அட்டியென்ன?சிந்தித்தாள்
விதியே,விதியே நின்னை
நிந்திப் பயனில்லை
சந்திப்பேனுன்னை
ஆகா!விந்தையிவள் முயற்சியென நீ
நொந்துபோகும் அளவிற்குப்
பெறுவேன் மருந்தை
சீரகப் பெற்றவள் உற்ற
மார்பகப் புற்றைக்
கதிரியக்கம் கொண்டே
இற்றுவிழ வைப்பேன்
எனத் தன்னிலை மீண்டாள்
மீண்டும் உறுதி பூண்டாள்.
மருத்துவம் துணை கொண்டு
மனத்துவம் கருத்திற் கொண்டு
பணத்துவம் பலம் கொண்டு
சென்றாள்
சிகிச்சை பெறுகிறாள்.
விதி வெல்வாள்.